TN Skills UPSC உதவித்தொகை தேர்வு: 200-க்கு 197 மதிப்பெண் பெற்ற மாணவரால் சர்ச்சை - முறைகேடு புகார் எதிரொலி

TN Skills UPSC உதவித்தொகை தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) சார்பில் நடத்தப்படும் UPSC உதவித்தொகை தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தேர்வர்கள் சென்னை காவல்துறை தலைமை இயக்குநரிடம் (DGP) மனு அளித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், இதில் முதலிடம் பிடித்த மாணவர் 200-க்கு 197.33 மதிப்பெண்களைப் பெற்றிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளின் தரவுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் அசாதாரணமான மதிப்பெண் என தேர்வர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முன்னதாக 2023-இல் 172 மதிப்பெண்களும், 2024-இல் 167.3 மதிப்பெண்களும், 2025-இல் 139.94 மதிப்பெண்களுமே அதிகபட்ச மதிப்பெண்களாக இருந்தன.
தேர்வு எழுதிய மாணவர்கள் முன்வைத்துள்ள புகாரின்படி, முதலிடம் பெற்ற அந்த நபர் தேர்வு அறையில் வினாத்தாளோடு சுமார் 20 நிமிடங்கள் கழிவறைக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தேர்வு மையத்தில் இருந்த சக மாணவர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த தகவலைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், முதலிடம் பெற்றவருக்கும் இரண்டாம் இடம் பிடித்தவருக்கும் இடையே 52.71 மதிப்பெண் வித்தியாசம் இருப்பது தேர்வர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கோவை தேர்வு மையத்திலும் இதேபோன்ற முறைகேடு நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான 1,000 மாணவர்களுக்கு UPSC தேர்வுக்குத் தயாராவதற்காக மாதம் 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வர்கள் எழுப்பியுள்ள புகார்களைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், தேர்வு மையத்திலேயே அந்த மாணவர் 20 நிமிடங்கள் வெளியே சென்றது குறித்து புகார் எழுந்தது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், அந்த மாணவரின் மதிப்பெண் வழக்கத்தை விட மிக அதிகமாக இருப்பதையும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்குவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட மாணவரின் தேர்வு முடிவை நிறுத்தி வைப்பது குறித்து இந்த வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முறைகேடு புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு நிதியுதவி திட்டங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பதே தேர்வர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.









