dhina anjal logo
முகப்பு/விளையாட்டு

டிஎன்பிஎல் போட்டி விதிமுறை மீறல்: தமிழக கிரிக்கெட் வீரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

By Admin
14/08/2026
155 views
டிஎன்பிஎல் போட்டி விதிமுறை மீறல்: தமிழக கிரிக்கெட் வீரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விதிமுறைகளை மீறிய தமிழக வீரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின் போது, பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் (ACSU) விதிமுறைகளை மீறியதாக வளர்ந்து வரும் தமிழக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் போது வீரர்கள் மற்றும் நடுவர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதியில் (PMOA) மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இந்த வீரர் அதனை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (TNCA) அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட வீரர் போட்டி நடந்து கொண்டிருந்த நேரத்தில் தனது தோழியுடன் குறுஞ்செய்தி அனுப்பியது கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்த வீரர் கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பைத் தொடரில் இரண்டு அரைசதங்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது ஊழல் தொடர்பான எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றாலும், போட்டி நடைபெறும் சூழலில் தடைசெய்யப்பட்ட பகுதியில் செல்போன் பயன்படுத்தியது மற்றும் தகவல் தொடர்பு சாதனத்தை அதிகாரிகளிடம் மறைத்தது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், இது ஒரு தீவிரமான குற்றச்செயல் அல்ல என்பதையும், சூதாட்டக் கும்பலுடன் வீரருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திய பின்னர், பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடுமையான தண்டனையைத் தவிர்த்து அபராதத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உத்தரவின் பேரில், அந்த வீரர் விளையாடி வந்த அணியிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்த விதிமுறை மீறல் சம்பவம் குறித்து அனைத்து உரிமையாளர்களுக்கும் மற்றும் அணிகளுக்கும் முறையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானங்களில் வீரர்களின் ஒழுக்கத்தை நிலைநாட்டவும், ஊழல் புகார்களுக்கு இடமளிக்காமல் இருக்கவும் பிசிசிஐ இது போன்ற கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகி ஒருவருக்கும் இதே போன்று செல்போன் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#கிரிக்கெட்
#டிஎன்பிஎல்
#தமிழகம்
#விதிமுறைமீறல்
#செய்தி
#TNPL
#CricketNews
#TamilNadu
#BCCI
#SportsUpdate
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications