வீடு ஒப்படைப்பில் தாமதம்: வாடிக்கையாளர்களின் கோரிக்கையை காரணமாகக் கூற முடியாது - TNREAT அதிரடி உத்தரவு

வீடு ஒப்படைப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு வாடிக்கையாளர்களின் விருப்பப்படியான மாற்றங்களே காரணம் என்று கூறுவதை ஏற்க முடியாது என TNREAT அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வீடு மற்றும் வில்லாக்களை ஒப்படைப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்ட மாற்றங்களே (Customisation) காரணம் என்று கட்டுமான நிறுவனங்கள் சாக்குப்போக்கு கூறுவதை தமிழ்நாடு நிலம் மற்றும் மனைப் பிரிவு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TNREAT) திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த தீர்ப்பானது, தங்கள் கனவு இல்லத்திற்காக நீண்ட காலம் காத்திருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் உள்ள 'எஸ் & பி - தி அட்ரஸ்' (S & P - The Address) என்ற குடியிருப்பு திட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள், கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமான ஒப்பந்தம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 2022-இல் விற்பனைப் பத்திரத்தையும் பதிவு செய்தனர். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமாக 3.35 லட்சம் ரூபாயைச் செலுத்தி, தங்களுக்குத் தேவையான சில மாற்றங்களைச் செய்யுமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டனர். இந்தக் கூடுதல் கட்டணத்தைச் செலுத்திய இரண்டு நாட்களிலேயே கட்டுமான நிறுவனம் அதைப் பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு, கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட நிறுவனம், அக்டோபர் 2024-க்குள் வீட்டை ஒப்படைப்பதாகத் மின்னஞ்சல் மூலம் உறுதியளித்திருந்தது. இருப்பினும், உரிய காலத்திற்குள் வீட்டை வழங்காத நிறுவனம், வாடிக்கையாளர்கள் கேட்ட மாற்றங்களே இந்தத் தாமதத்திற்கு அடிப்படைக் காரணம் என்று வாதிட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. உரிய நேரத்தில் மாற்றங்களைக் கோரியிருந்தாலும், அதற்காகக் கட்டுமானப் பணிகளை நீண்ட காலம் தள்ளிப்போடுவது ஏற்புடையதல்ல என்று தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது இந்தத் தீர்ப்பின் மூலம், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அந்த வில்லாவின் கட்டுமானப் பணிகளை முழுமையாக முடித்து, வாடிக்கையாளர்களிடம் வீட்டை ஒப்படைப்பதற்கான தேதியை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், கட்டுமான நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதிலும் இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.









