சென்னை அண்ணா நகர் கட்டுமானப் பணி: விதிகளை மீறிய நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம் விதித்த டி.என்.ஆர்.இ.ஆர்.ஏ.

சென்னை அண்ணா நகர் கட்டுமானத் திட்டத்தில் விதிகளை மீறியதற்காக எமரால்டு ஹேவன் நிறுவனத்திற்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி ஒழுங்குமுறை ஆணையமான டி.என்.ஆர்.இ.ஆர்.ஏ, அண்ணா நகரில் கட்டுமானத் திட்டத்தை மேற்கொண்டு வரும் எமரால்டு ஹேவன் டெவலப்மென்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட கட்டுமானத் திட்டத்தில் விற்பனை மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களை முறையாகப் பதிவு செய்வதற்கு முன்பாகவே, வீட்டின் மொத்த மதிப்பில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 13-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் உடனடியாக விற்பனை ஒப்பந்தங்களைப் பதிவு செய்து, 30 நாட்களுக்குள் சொத்து பரிமாற்றப் பத்திரத்தை (Conveyance Deed) முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம், வீடு வாங்கிய இருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது. தங்களிடம் தவறான தகவல்களைக் கூறி அதிக விலைக்கு வீடுகளை விற்பனை செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். குறிப்பாக, தங்களது திட்டம் அண்ணா நகரின் மையப்பகுதியில் இருப்பதாகக் கூறி, அண்ணா நகரின் அஞ்சல் குறியீட்டு எண்ணான 600040-ஐ நிறுவனம் பயன்படுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இருப்பினும், இந்தத் திட்டம் உண்மையில் பாடி பகுதியில் அமைந்துள்ளதாகவும், அதன் அஞ்சல் குறியீட்டு எண் 600050 என்றும், இதனால் சந்தை மதிப்பை விட கூடுதல் தொகையை தாங்கள் செலுத்தியதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த தவறான விளம்பரத்தின் மூலம் தங்களுக்கு சுமார் 1.1 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து ரெரா சட்டத்தின் 12-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர். இதற்கான விளக்கத்தை அளித்த நிறுவனம், இது திட்டமிட்ட மோசடி அல்ல என்றும், அஞ்சல் குறியீட்டு எண்ணில் ஏற்பட்ட தட்டச்சு பிழை மட்டுமே என்றும், இதைச் சரிசெய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறியது. இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம், விளம்பர விதிமீறல் புகாரை தள்ளுபடி செய்தது.
இருப்பினும், வீட்டின் மொத்த மதிப்பீடான 2.88 கோடி ரூபாயில், ஏற்கனவே 1.72 கோடி ரூபாயை வாடிக்கையாளர்களிடம் இருந்து நிறுவனம் பெற்றுள்ளது. ரெரா சட்டத்தின் பிரிவு 13-ன் படி, எழுத்துப்பூர்வமான மற்றும் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் இன்றி 10 சதவீதத்திற்கு மேல் தொகையை வசூலிப்பது சட்டப்படி குற்றமாகும். ஜூலை 17, 2025 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த அபராதம் விதிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், கட்டுமானத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதிலும் இந்த உத்தரவு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.









