தருமபுரி: சாலை வசதி இல்லாததால் பழங்குடியின பெண் டோலியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பரிதாபம்

தருமபுரி மாவட்டம் அலகட்டு பழங்குடியின கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் டோலியில் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அலகட்டு பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் மக்கள், முறையான சாலை வசதிகள் இல்லாததால் நீண்ட காலமாக கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அண்மைக்காலமாக வடகிழக்கு பருவமழை காரணமாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், கிராமத்திற்குச் செல்லும் ஒற்றையடி மண் பாதையும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவ அவசர காலங்களுக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், கௌரி நோன்பு பண்டிகைக்காகத் தனது சொந்த ஊரான அலகட்டுக்கு வந்திருந்த மல்லிகா (25) என்ற இளம்பெண், நள்ளிரவு 3 மணி அளவில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். வலியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கிராம மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். எனினும், மழைநீரால் மண் பாதை அடித்துச் செல்லப்பட்டிருந்ததால், எவ்வித வாகனமும் கிராமத்திற்குள் நுழைய முடியாத நிலை இருந்தது. வேறு வழியின்றி, கிராம மக்கள் அனைவரும் இணைந்து ஒரு டோலியை உருவாக்கி, மல்லிகாவை அதில் சுமந்துகொண்டு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்து சென்றனர்.
சீங்காடு பகுதியை அடைந்த பிறகு, அங்கிருந்து ஆட்டோ மூலம் அவர் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது மல்லிகாவுக்கு வயிற்றுத் தொற்று காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாகவே இப்பகுதி மக்கள் தார் சாலை அமைக்கக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு காலம் வரை கழுதைகள் மூலம் பொருட்களைக் கொண்டு சென்ற நிலையில், தற்காலிக மண் பாதைகள் மூலம் வாகனங்கள் சென்று வந்தன. ஆனால், மழைக்காலங்களில் இப்பாதை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடுகிறது.
இந்த சாலைத் திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கையில், கேசர்குளி மற்றும் திருமல்வாடி வனப்பகுதிகளில் சுமார் 4.81 ஹெக்டர் நிலத்தை மாற்றி அமைத்து, 6.38 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்தப் பகுதி காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இப்பாதைக்கான அனுமதி கடந்த எட்டு ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிவேஷ் இணையதளத்தில் நிலுவையில் உள்ளது. வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைந்து தொடங்கும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.









