தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.17,167 கோடியில் பிரம்மாண்ட வெளித்துறைமுக திட்டம்: மத்திய அரசு அனுமதி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17,167 கோடி மதிப்பிலான வெளித்துறைமுக திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 17,167 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய வெளித்துறைமுக திட்டத்தை செயல்படுத்த மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் கடல்சார் வணிகத்தை மேம்படுத்துவதோடு, தென் மாவட்டங்களின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 11,733 கோடி ரூபாய் செலவில் கலப்பு முதலீட்டு முறையின் (Hybrid Annuity Model) கீழ் துறைமுகக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ், கண்டெய்னர் முனையத்தை விரிவாக்கம் செய்வதற்காக 5,434 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, செயல்பாடு மற்றும் பரிமாற்றம் (DBFOT) என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் அலை தடுப்புச் சுவர்கள், பாறைகள் கொண்டு கரையமைத்தல், கப்பல் தங்குமிடங்கள் மற்றும் சரக்குக் கையாளும் திறன் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். தலா 1,000 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு நவீன கண்டெய்னர் முனையங்கள் அமைக்கப்பட உள்ளதால், அதிக அளவிலான சரக்குகளைக் கையாள வழிவகை பிறக்கும்.
இந்த வெளித்துறைமுக திட்டம் 4 மில்லியன் முதல் 5.2 மில்லியன் வரையிலான இருபது அடி சமமான அலகுகளை (TEUs) கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 18,000 முதல் 24,000 TEUs வரையிலான பிரம்மாண்ட சரக்குக் கப்பல்களைக் கையாளும் வகையில், துறைமுகத்தின் ஆழம் தற்போதுள்ள 16 மீட்டரிலிருந்து 18 மீட்டராக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான தூர்வாரும் பணிகள் மற்றும் நிலத்தை மறுசீரமைக்கும் பணிகள் இத்திட்டத்தின் முக்கிய அங்கங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த திட்டம், சில தடைகளுக்குப் பிறகு தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. தொடக்கத்தில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டங்களில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார காரணங்களால் இத்திட்டம் தள்ளிப்போனது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டெக்னிகா ஒய் ப்ரோயெக்டோஸ் (TYPSA) நிறுவனத்திடம் புதிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு இதற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் எட்வின் சாமுவேல் கூறுகையில், இந்தத் திட்டம் தென் மாவட்டங்களின் தொழில்துறை செயல்பாடுகளைப் பன்மடங்கு ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.









