U20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர்கள்

ஸ்லோவாக்கியாவில் நடைபெறும் U20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்திய கிரிகோ-ரோமன் வீரர்கள் பதக்க வாய்ப்பை இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா நகரில் நடைபெற்று வரும் U20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாள் போட்டிகள் இந்திய அணிக்கு சவாலானதாக அமைந்தது. கிரிகோ-ரோமன் பிரிவில் பங்கேற்ற நான்கு இந்திய வீரர்களில் எவருமே பதக்கச் சுற்றுக்கு முன்னேறத் தவறியது இந்திய ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க நாளில் மொத்தம் நான்கு எடைப் பிரிவுகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் களமிறங்கினர்.
இதில் 77 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற தீரஜ் குமார் மட்டும் காலிறுதிப் போட்டி வரை முன்னேறி நம்பிக்கையளித்தார். தகுதிச் சுற்றில் செர்பியாவின் ஜலான் பெக்கை வீழ்த்திய தீரஜ், அதனைத் தொடர்ந்து பல்கேரிய வீரரான கிறிஸ்டோ பி வாலன்டினோவை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். எனினும், காலிறுதிப் போட்டியில் ஜார்ஜியாவின் ஜியோர்கி கோகெலாஷ்விலியிடம் அவர் தோல்வியடைந்தார். இவரை வீழ்த்திய ஜார்ஜிய வீரர் அதன் பிறகு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், தீரஜ் குமாருக்கான ரிபீசேஜ் (repechage) வாய்ப்பும் பறிபோனது.
மற்ற வீரர்களின் செயல்பாட்டைப் பொறுத்தவரை, 63 கிலோ எடைப் பிரிவில் ஆதித்யா சிவாஜி டேட் தகுதிச் சுற்றில் உக்ரைன் வீரரை வீழ்த்திய போதிலும், அடுத்த சுற்றில் கிர்கிஸ்தான் வீரரிடம் தோல்வியைத் தழுவினார். அதேபோல, 87 கிலோ எடைப் பிரிவில் அகில் மற்றும் 55 கிலோ எடைப் பிரிவில் பியூஷ் குமார் ஆகியோரும் தங்களின் எதிராளிகளிடம் வீழ்ந்தனர். அகில் மற்றும் பியூஷ் குமார் போட்டியிட்ட வீரர்களும் காலிறுதிச் சுற்றுகளிலேயே வெளியேறியதால், இந்திய வீரர்களின் பதக்க வாய்ப்புகள் முற்றிலும் முடிவுக்கு வந்தன.
இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்திய மல்யுத்த வீரர்கள் விசா சிக்கல்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மனிதக் கடத்தல் தொடர்பான சந்தேகங்கள் காரணமாக, புது தில்லியில் உள்ள ஸ்லோவாக்கியா தூதரகம் இந்திய வீரர்களுக்கான விசா வழங்குவதில் காலதாமதம் செய்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI), மத்திய வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் தலையீட்டிற்குப் பிறகே இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வீரர்கள் ஸ்லோவாக்கியா சென்றடைந்தனர். இன்று நடைபெறவுள்ள அடுத்தகட்ட போட்டிகளில் 55, 67, 72 மற்றும் 97 கிலோ எடைப் பிரிவுகளில் மற்ற இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.









