கள்ளக்குறிச்சி விவகாரம்: சி.பி.ஐ விசாரணை கோரி டி.ஜி.பி-யிடம் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு புகார்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீதான பாலியல் புகாரில் சி.பி.ஐ விசாரணை கோரி டி.ஜி.பி-யிடம் உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரை (DGP) நேரில் சந்தித்து முக்கிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது, பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தை மறைக்க முயற்சி செய்ததாகக் கூறி, தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கடந்த ஜூலை 31-ஆம் தேதியே தலைமைச் செயலாளரிடம் முறையீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், 116 நாட்களாகியும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை வேறு மாவட்டத்திற்கு மாறுதல் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தியது, குற்றத்தைச் சரிசெய்யும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தெரியப்படுத்தப்பட்டதா அல்லது தலைமைச் செயலாளர் மறைத்தாரா என்பது குறித்து உரிய விளக்கம் தேவை என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகே இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, தற்போதைய அரசு குற்றச்சாட்டில் உள்ளவர்களைக் காப்பாற்றவே 4 மாதங்களாக முயற்சி செய்து வருவதாகக் காட்டமாக விமர்சித்தார். தவெக அரசின் 'மாற்றம்' என்ற வாக்குறுதியைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் இப்போது இந்த ஆட்சியை 'துர்நாற்றம்' என்று அழைப்பதாகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்தார். மேலும், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் எம். ரவிசங்கர் மீதுள்ள தாக்குதல் புகார் குறித்தும் அவர் டி.ஜி.பி-யிடம் முறையிட்டு, அவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவினர் மீது ஆளும் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்று கூறிய உதயநிதி, ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கே. கார்த்திகேயன் மீதான புகாரையும் மறுத்தார். அரசுப் பணி நிமித்தமாகத் தான் அவர் வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்த அவர், மற்ற வழக்குகள் மற்றும் தனிநபர் புகார்கள் குறித்து முறையான சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம் என்றும், திமுக அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும் சவால் விடுத்துள்ளார்.









