பெண் ஆட்சியருக்கு பாலியல் தொல்லை: டிவிகே எம்எல்ஏ சி. அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு

பெண் மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட டிவிகே எம்எல்ஏவை கைது செய்யக்கோரி ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து முக்கிய மனு ஒன்றினை அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதி டிவிகே எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் மீது, பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் ரீதியாக அநாகரிகமான செய்திகளை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட எம்எல்ஏவைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுடன் தயாநிதி மாறன் எம்பி மற்றும் வழக்கறிஞர்கள் குழுவினர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாநில நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையைத் தான் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். கடந்த 116 நாட்களாக இந்த விவகாரத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் மறைக்க முயல்வதாகவும், குற்றவாளியைக் காப்பாற்றும் வகையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் தலைமைச் செயலாளர் பேசியதாகவும், அவரை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்வதன் மூலம் பிரச்சனையை முடித்துக்கொள்ள அறிவுறுத்தியதாகவும் பகீர் தகவல்களை அவர் வெளியிட்டார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பதே தங்களின் பிரதான கோரிக்கை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் நடந்த பாலியல் வன்முறைச் சம்பவங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், ராணிப்பேட்டை மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் இந்த அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதையும், அதனை ஆளும் கட்சித் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் அவர் கடுமையாகச் சாடினார்.
இச்சம்பவம் குறித்து பொதுவெளியில் மறுப்புத் தெரிவித்த அமைச்சர்கள் மூவர் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள், குற்றச்சாட்டுகளை மறைக்க முற்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். ஆளுநர் இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணைக்கு வழிவகை செய்யாவிட்டால், இந்தத் தகவல்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று போராட்டம் நடத்தப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.









