திமுக ஆட்சியில் ஊழல் நடந்திருந்தால் ஆதாரத்துடன் நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

முந்தைய திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரம் இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. முந்தைய திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், அத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மையில் ஆதாரம் இருந்தால், அதனைத் தயங்காமல் வெளிப்படுத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு நேரடி சவால் விடுத்தார். வெறும் மிரட்டல்களுக்கும், ஆதாரமற்ற புகார்களுக்கும் தாங்கள் அஞ்சப்போவதில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக, கோப்புகளை வெளியிடுவது குறித்து கிண்டலாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், அவை ஏதோ ஜோதிடரின் ஆலோசனைக் கிடைத்தால் மட்டுமே வெளியிடப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதாவ் அர்ஜுனா, சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார். அதேநேரத்தில், அவைக் குறிப்பிலிருந்து ஜோதிடர் என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று அமைச்சர் என். ஆனந்த் கோரிக்கை விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி, ஜோதிடர் என்பது தவறான சொல் அல்ல என்றும், அரசு பதவியில் ஒருவரை அமர்த்திவிட்டு பின்னர் நீக்கியவர்கள் நீங்கள்தான் என்றும் சாடினார்.
விவாதத்தின் மற்றொரு கட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அமைச்சர் நிர்மல் குமார் சில கருத்துகளை முன்வைத்தார். அப்போது, ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்று மஞ்சள் துண்டு அணிந்த ஒருவரைத் தமிழ்நாடு ஏற்கனவே பார்த்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வாதம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கருத்து மோதல்களுக்கு மத்தியிலும், சட்டப்பேரவைச் செயல்பாடுகள் குறித்த பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், தாங்கள் இதற்கு எதிரானவர்கள் அல்ல என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வலம் வருவது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். நீக்கப்பட்ட கருத்துகள் எப்படி சமூக வலைதளங்களுக்குச் செல்கின்றன என்றும், இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் அவர் வினவினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆதாரமற்ற கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்று தெரிவித்தார்.









