தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் முக்கிய புகார்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண் ஆட்சியர் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும், ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசிடம் உரிய விளக்கம் கோர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரிடம் வலியுறுத்தியுள்ளார். சென்னை லோக் பவனில் ஆளுநரைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், இது தொடர்பான விரிவான மனுவை அளித்தார். அரசியலமைப்பின் 167(பி) பிரிவின் கீழ், ஜூன் 2026 முதல் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் மற்றும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை முதல்வரிடம் ஆளுநர் கோர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முக்கியமாக, கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.அருள் விக்னேஷ் மீது, பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து ஆளுநரிடம் அவர் விரிவாகப் பேசினார். கடந்த ஜூலை 31, 2026 அன்று தலைமைச் செயலாளரிடம் முறையிடப்பட்ட அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆளுங்கட்சியின் தலைமைக்கு அனுப்பப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உயர் நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்யவும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த தனது மனுவில், துறையூரில் குடிநீர் கேட்டு மனு அளித்த குடிமகன் மீது துணை சபாநாயகர் தாக்குதல் நடத்திய விவகாரத்தையும், பாதிக்கப்பட்டவரை மிரட்டி வாக்குமூலத்தைப் பெற முயன்ற சமயபுரம் காவல் ஆய்வாளர் மீதான புகாரையும் அவர் முன்னிறுத்தினார். மேலும், கடந்த சில மாதங்களில் காவல்துறை காவலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஒன்பது மரணங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆயனாவரம், காரமடை, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆளுங்கட்சியினர் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள உதயநிதி ஸ்டாலின், நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் சென்னையில் 71.24 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரங்களில் ஆளுங்கட்சியினரின் தொடர்பு குறித்து சுதந்திரமான விசாரணை தேவை என்றார். அமலாக்கத்துறை மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யவும், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் ஒருங்கிணைந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய மாநில அளவிலான கண்காணிப்பு முறையை உருவாக்கவும், காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த மாநில பாதுகாப்பு ஆணையத்தை விரைந்து செயல்படுத்துமாறும் அவர் ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.









