கொற்கை துறைமுகத்தில் அடுத்த ஆண்டு தொடங்குகிறது நீருக்கடியிலான ஆய்வு: தமிழக அரசு முக்கிய நடவடிக்கை

கொற்கை மற்றும் பூம்புகார் துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் நீருக்கடியிலான அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க தமிழ்நாடு தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் பழங்கால கடல்சார் வரலாற்றைப் பறைசாற்றும் கொற்கை மற்றும் பூம்புகார் துறைமுகங்களில், நீருக்கடியிலான ஆய்வுகளைத் தீவிரப்படுத்த தமிழ்நாடு தொல்லியல் துறை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி, கொற்கை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோனார் ஆய்வின் முடிவுகள் மற்றும் பூம்புகார் பகுதியில் நடைபெற்று வரும் விரிவான நீருக்கடியிலான ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை, வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு உரிய அரசு அனுமதிகள் கிடைக்கப்பெற்றவுடன், கொற்கை கடற்பகுதியில் மூழ்கியிருக்கக்கூடிய தொல்லியல் சான்றுகளைக் கண்டறியும் diving எனப்படும் நீருக்கடியிலான தேடுதல் வேட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் மல்டி-பீம் எக்கோ சவுண்டிங், சைடு-ஸ்கேன் சோனார் மற்றும் சப்-பாட்டம் பிரொபைலர் போன்ற நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு, கடலுக்கு அடியில் இருக்கக்கூடிய சாத்தியமான வரலாற்றுச் சின்னங்கள் குறித்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. தற்பொழுது அந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, அவற்றின் உண்மையான தன்மையைக் கண்டறியும் பணியில் துறை ஈடுபட்டுள்ளது. சோனார் மூலம் கிடைக்கும் பிம்பங்களை மட்டும் வைத்து முடிவுக்கு வர முடியாது என்பதால், நேரடியாக நீர்மூழ்கி ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்து, அங்குள்ள கப்பல் சிதைவுகள் மற்றும் பிற வரலாற்று ஆதாரங்களை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என தொல்லியல் துறை இணை இயக்குநர் வி.பி. யதீஷ்குமார் தெரிவித்தார்.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் தற்போது மூன்றாவது கட்ட நீருக்கடியிலான அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியின் ஒரு பகுதியாக, ஏற்கனவே கண்டறியப்பட்ட மட்பாண்டங்கள் மற்றும் கப்பல் சிதைவுகளுக்குத் தேவையான மேம்பட்ட காட்சிப் பதிவுகள் மற்றும் ஆவணப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் சுமார் பத்து சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் முழுமையான ஆவணங்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொற்கை பகுதி பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமானியப் பேரரசு உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த மிக முக்கியமான துறைமுகமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கொற்கையின் வரலாற்றுச் சிறப்பைப் பறைசாற்றும் வகையில், இதற்கு முன்பாக 1968-69 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிலப்பகுதி அகழ்வாராய்ச்சிகளில் சங்கு அறுக்கும் பட்டறைகள், முத்து குளித்தல் சார்ந்த ஆதாரங்கள், சுடுமண் விளக்குகள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட எலும்பு கருவிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகள், இப்போது மேற்கொள்ளப்படவுள்ள நீருக்கடியிலான ஆய்வின் தேவையை மேலும் வலுப்படுத்துகின்றன. கடலுக்கு அடியில் புதைந்துள்ள கொற்கைத் துறைமுகத்தின் கட்டமைப்புகளைக் கண்டறிவதன் மூலம், சங்க காலத்தின் கடல்சார் வணிக வலையமைப்பு மற்றும் அன்றைய கால மக்கள் வாழ்வியல் முறைகள் குறித்த புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.









