உசிலம்பட்டி பள்ளி மாணவி தற்கொலை: தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

உசிலம்பட்டி அரசு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தோ,்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி பி. நிஷாந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விமலா தேவி மீது தற்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது, கடந்த ஆகஸ்ட் 24 அன்று, மாணவி நிஷாந்தி தனது தாயாருடன் சேர்ந்து உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பில் சேருவதற்காகச் சென்றுள்ளார். அங்கு தலைமை ஆசிரியை விமலா தேவியைச் சந்தித்தபோது, தனது தாயார் தலைமை ஆசிரியையிடம் கைகளைக் கட்டிக்கொண்டு பணிவுடன் நின்றதைக் கண்டு, சிறுமி தனது தாயாரைத் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை விமலா தேவி, மாணவியை கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 25 அன்று, மாணவி நிஷாந்தி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். முதலில் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வழக்கு பதிவு செய்திருந்த காவல்துறையினர், பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாணவியைத் தலைமை ஆசிரியை திட்டியதே தற்கொலைக்குத் தூண்டுதலாக அமைந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதாக விமலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, தற்பொழுது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் கல்வித் துறை வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய மன உளைச்சலில் உள்ளவர்கள், தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க தமிழக அரசின் உதவி மைய எண்ணான 104 அல்லது ஸ்நேகா அமைப்பின் தற்கொலை தடுப்பு உதவி மைய எண்ணான 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய தலைமை ஆசிரியை விமலா தேவி மீதான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.









