தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியது முறையற்ற செல்வாக்கு அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியது முறையற்ற செல்வாக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த ஏப்ரல் 2026 சட்டமன்றத் தேர்தலின் போது பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தி, அவர்களின் பெற்றோர் தனது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு ஒன்றில், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி மிக முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளார். சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கே.சிவகுமாரின் வெற்றியை எதிர்த்து, முன்னாள் அமைச்சரும் திமுக வேட்பாளருமான ஆர்.ராஜேந்திரன் இந்த தேர்தல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் மனுவில் ஆர்.ராஜேந்திரன் குறிப்பிட்டதாவது, விஜய் குழந்தைகளிடம் விடுத்த இந்த வேண்டுகோள் வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாகவும், குடும்ப ரீதியாகவும் தூண்டிவிடும் செயலாக அமைந்ததாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123(2)-ன் கீழ் 'முறையற்ற செல்வாக்கு' (undue influence) என்ற ஊழல் நடைமுறைக்குள் வருவதாகவும் வாதிட்டார். இதன் அடிப்படையில் கே.சிவகுமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சிவகுமார் இந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில், புகார்தாரர் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் உண்மையாக எடுத்துக்கொண்டாலும் கூட, குடும்ப உறவுகளையும் உணர்ச்சிகளையும் பயன்படுத்தி வாக்காளர்களை ஈர்ப்பது என்பது, வயது வந்தோரின் சுதந்திரமான மன விருப்பத்தை ஒடுக்கிவிடக்கூடிய அளவிற்கு ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். எனவே, விஜய் விடுத்த கோரிக்கையோ, அதன் விளைவாக குழந்தைகள் செய்த செயல்களோ அல்லது அவற்றைப் பார்த்து பெற்றோர்கள் நடந்துகொண்ட விதம் ஆகிய எவையும் 'முறையற்ற செல்வாக்கு' என்ற பிரிவின் கீழ் விசாரணைக்குரிய குற்றச்சாட்டாக அமையாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கே.சிவகுமாரின் வெற்றியை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளையில், தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளை ஈடுபடுத்திய விவகாரத்தில் நீதிபதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இத்தகைய செயல் 'நல்ல ரசனையற்றது' (in bad taste) என்று குறிப்பிட்ட நீதிபதி, குழந்தைகளை இத்தகைய பணிகளில் ஈடுபடுத்த அனுமதிப்பது 'மோசமான வளர்ப்பு' முறையை வெளிப்படுத்துவதாகவும் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்காக குழந்தைகளை வைத்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் (reels) உருவாக்குவது மிகவும் மலிவான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து நாடாளுமன்றமும், இந்தியத் தேசமும் விரிவான விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.









