அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கைகொடுக்கும் 'வள்ளம் ஏஐ': கற்றல் இடைவெளிகளை நிரப்ப புதிய தொழில்நுட்பம்

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த மதி அறக்கட்டளை மூலம் 'வள்ளம் ஏஐ' (VallamAI) என்ற செயற்கை நுண்ணறிவு கருவி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் உதவவும் 'வள்ளம் ஏஐ' (VallamAI) எனும் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மதி அறக்கட்டளை (Madhi Foundation) மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், தற்போது ஏழு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 60,000 மாணவர்கள், 2,100 ஆசிரியர்கள் மற்றும் 150 கல்வி பயிற்றுநர்கள் பயனடைந்து வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் ஒரே வகுப்பறையில் பயிலும் மாணவர்களிடையே கற்றல் நிலையில் பெரும் வேறுபாடுகள் இருப்பது நீண்டகால சவாலாக இருந்து வருகிறது. இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களின் கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான கூடுதல் பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்குவதற்கு 'வள்ளம் ஏஐ' பெரிதும் உதவுகிறது. ஆசிரியர்கள் தாங்கள் சேகரிக்கும் வகுப்பறைத் தரவுகளை இந்த தளத்தில் உள்ளிடுவதன் மூலம், ஒவ்வொரு மாணவரின் கற்றல் நிலையைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
ஆசிரியர்கள் மாணவர்களை பேச்சு, பலவுள் தெரிவு வினாக்கள் அல்லது நேரடியாக மதிப்பெண்களை உள்ளீடு செய்வதன் மூலம் மதிப்பீடு செய்ய முடியும். இதன் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் கற்றல் நிலைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குத் தேவையான தனிப்பட்ட வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்தத் தளத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு சாட்போட் (Chatbot) வசதியைப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு குரல் அல்லது உரை வடிவில் உடனடியாகத் தீர்வு பெற முடியும்.
இந்தத் தொழில்நுட்பமானது, ஆசிரியர்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் நேரத்தைக் குறைத்து, மாணவர்களுக்குக் கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது. கல்வி அதிகாரிகள் மற்றும் பயிற்றுநர்களுக்கு இது ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் மாணவர்களின் முன்னேற்றம் குறித்த விரிவான தரவுகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. இதன் மூலம் எந்தெந்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி தேவை என்பதை கண்டறிந்து இலக்கு சார்ந்த உதவிகளை வழங்க முடியும். தமிழ்நாட்டின் 'எண்ணும் எழுத்தும்' போன்ற அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.









