வேலூர் மாநகராட்சி சந்தை: லட்சக்கணக்கில் செலவிட்டும் கைவிடப்பட்ட சந்தை - என்னதான் நடக்கிறது?

வேலூரில் பல லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட மாநகராட்சி சந்தை, போதிய வாடிக்கையாளர்கள் வராததால் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
வேலூர் அண்ணா சாலையில் அமைந்துள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை சந்தை, தற்போது எவ்வித வணிக நடவடிக்கைகளும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 82.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழைய மீன் சந்தை இருந்த இடத்தில் இந்த நவீன சந்தை கட்டப்பட்டது. சாலையோர வியாபாரிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்ட இந்த சந்தை, ஆரம்பத்தில் சிறிது காலம் இயங்கிய நிலையில், தற்போது முற்றிலும் பயன்பாடின்றி கிடப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்தையின் தோல்விக்கு முக்கிய காரணமாக வணிகர்கள் கருதுவது அதன் அமைப்பைத்தான். பிரதான சாலைகளில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களுக்காக வாடிக்கையாளர்கள் இந்த சந்தைக்குள் வருவதில்லை என்றும், இதனால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 100 ரூபாயாக இருந்த வாடகை, பின்னர் 40 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. கடந்த 2024-2025 நிதியாண்டில், சிதிலமடைந்த கூரைகளை மாற்றுதல் மற்றும் கடைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக மாநகராட்சி மீண்டும் 37.50 லட்சம் ரூபாய் செலவிட்டது. இருப்பினும், வியாபாரிகளின் ஆர்வம் குறையவே செய்தது.
வேலூர் வணிகர் சங்கத் தலைவர் ஞானவேலு இது குறித்து கூறுகையில், தற்போதுள்ள 147 கடைகளும் காலியாகவே இருப்பதாகவும், தொடக்க காலத்தில் 3க்கு 6 அடி அளவில் இருந்த கடைகள் தற்போது 6க்கு 6 அடி என விரிவாக்கம் செய்யப்பட்டும் வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். முறையான வணிக வாய்ப்புகள் இல்லாததால், இந்த வளாகத்தை வாகன நிறுத்துமிடமாக (Parking Lot) மாற்ற வேண்டும் என வணிகர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
சந்தை வளாகம் தற்போது சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதுடன், மது அருந்துதல் மற்றும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு காவலர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மாநகராட்சி தரப்பில், சமூக விரோதச் செயல்கள் குறித்து புகார்கள் ஏதும் வரவில்லை என்று கூறப்பட்டாலும், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.









