வேலூர்: 18 ஆண்டுகளாக முடிக்கப்படாத அரசு வீடுகள் - பரிதவிக்கும் இருளர் இன மக்கள்

வேலூர் குடியாத்தம் சோனியா காந்தி நகரில் 18 ஆண்டுகளாக முடிக்கப்படாத அரசு வீடுகளால் இருளர் பழங்குடியின மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொண்டசமுத்திரம் பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்கள், அடிப்படை வசதிகளற்ற வீடுகளில் தங்களின் வாழ்நாளைக் கழித்து வருகின்றனர். கடந்த 2008-09 ஆம் ஆண்டுகளில் அரசுத் திட்டத்தின் கீழ் கட்டத் தொடங்கப்பட்ட வீடுகள், சுமார் 18 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. சுவர்களில் விரிசல், மேற்கூரை பெயர்ந்து விழுதல் மற்றும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் சிதிலமடைந்துள்ள இந்த வீடுகளில் வசிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், இந்த வீடுகளின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது.
சமீபத்தில் பெய்த மழையினால், பாஸ்கர் என்பவரது வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் அவரது பள்ளி செல்லும் மகன் காயமடைந்தார். கொத்தடிமைத் தொழிலிலிருந்து கடந்த 2025 ஆம் ஆண்டு மீட்கப்பட்ட பாஸ்கர் குடும்பத்தினர், தற்போது மேற்கூரை இடிந்து விழுந்த அச்சத்தால் தற்காலிக குடிசைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவரது வீட்டில் மின்சார வசதி இல்லாததால், பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதைக் கண்டு பாஸ்கர் கவலையடைந்துள்ளார். போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தக் குடியிருப்புப் பகுதியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாதது, அப்பகுதி பெண்களை, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் கடும் சிரமத்திற்குள்ளாக்குகிறது. பெண்கள் தங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ள வெகுதூரம் அடிவாரப் பகுதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட பாஸ்கருக்கு அரசு தரப்பில் முறையான நிதி உதவி கிடைக்கவில்லை என்றும், வெறும் வேட்டி, சேலை மற்றும் 10 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் பாஸ்கர், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் கூறுகையில், பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களை அரசின் பிற நலத்திட்டங்களின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட பாஸ்கருக்கு நிதி உதவி கோரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுத தொழிலாளர் நலத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.









