வேலூர் பாலாற்றில் பாலம் இல்லாத அவலம்: தத்தளிக்கும் 5 கிராம மக்கள், பாதியில் நிற்கும் அரசுத் திட்டம்

வேலூர் மாவட்டம் மேலாத்தூர் பாலாற்றின் குறுக்கே நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என 5 கிராம மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சேரி, கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம், பள்ளிகுப்பம் மற்றும் சின்னஞ்சேரி ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மக்கள், தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக பாலாற்றின் குறுக்கே உள்ள ஒரு தற்காலிக மண் பாதையை மட்டுமே நம்பியுள்ளனர். சுமார் 250 மீட்டர் நீளம் கொண்ட இந்த மண் பாதை, இப்பகுதி மக்களுக்கு அருகில் உள்ள குடியாத்தம் நகருக்குச் செல்வதற்கான மிக வேகமான வழியாக உள்ளது. 2019-ம் ஆண்டு வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு, குடியாத்தம் இப்பகுதியின் முக்கிய நிர்வாக மையமாக மாறியுள்ள நிலையில், இந்தப் பாலம் இல்லாதது மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
மழைக்காலங்களில் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது இந்த மண் பாதை முழுமையாகச் சேதமடைந்து விடுவதால், மக்கள் சுமார் 17 முதல் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகொண்டா அல்லது மதனுார் வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் மருத்துவ அவசரத் தேவைகள், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், மற்றும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆம்பூர் மற்றும் மதனுார் பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிவதால், மழைக்காலங்களில் வேலைக்குச் செல்ல முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த அவல நிலையை மாற்ற மேலாத்தூர் வழியாக நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். கடந்த 2025-26 மாநில நிதிநிலை அறிக்கையில் இப்பாலத்தைக் கட்டுவதற்கு ரூ. 37 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், பாலத்தைக் கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் மீண்டும் புதிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மண் பாதையைச் சரிசெய்வதற்காக சுமார் ஆறு முறை தலா 2.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், பாலத்திற்கான நிதி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசாணை (G.O.) வெளியிடப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். கே.வி. குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஈ. தென்றல் குமார், இப்பிரச்சினையைச் சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 50 ஆண்டுகளாக மக்கள் கோரி வரும் இந்தப் பாலம் அமைக்கப்பட்டால், போக்குவரத்துச் செலவுகள் குறைவதோடு, மினி பேருந்துகள் இயக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி மேம்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.









