லண்டனில் இணைந்த திரை நட்சத்திரங்கள்: சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் முதலமைச்சர் விஜய் - அஜித் சந்திப்பு

லண்டன் சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் சந்தித்துக்கொண்ட நிகழ்வு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் நடைபெற்ற புகழ்பெற்ற மிச்செலின் லே மான்ஸ் கோப்பை கார் பந்தயப் போட்டியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பந்தயத்தை தொடங்கி வைத்தார். சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழகத்தின் முன்னணி நடிகரும் பந்தய வீரருமான அஜித் குமார், தனது குழுவினருடன் இணைந்து போட்டியில் பங்கேற்றார். முதலமைச்சர் விஜய் பச்சை கொடி அசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்த காட்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும், இந்த சர்வதேச பந்தய தளத்தில் சந்தித்துக்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் மிக அன்பாகவும், சுமூகமாகவும் உரையாடிக்கொண்டது அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக, பந்தய காருக்குள் அஜித் அமர்ந்திருந்தபோது, முதலமைச்சர் விஜய் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பயணத்தின் பின்னணியில் தமிழக அரசின் முக்கிய திட்டமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி (Motor Sports City) அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடன் இருந்த நிலையில், பந்தய களத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் வணிக ரீதியான செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். சர்வதேச தரம் வாய்ந்த மோட்டார் பந்தயங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த 34 ஆண்டுகளாக திரையுலகில் சக கலைஞர்களாக பயணித்து வரும் தாங்கள், தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களை இத்தகைய ஒரு முக்கிய சர்வதேச நிகழ்வில் வரவேற்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மோட்டார் பந்தயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச அளவிலான பந்தயங்களை சென்னையில் நடத்துவதன் மூலம் உள்நாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தனது நீண்டகால விருப்பம் என அஜித் குறிப்பிட்டார். இதற்காக முதலமைச்சர் எடுத்து வரும் முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டினார்.









