ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் மகாராஜா: மேத்யூ மெக்கானாஹே நடிக்க வாய்ப்பு?

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ள நிலையில், முன்னணி நடிகர் மேத்யூ மெக்கானாஹே நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் திரைப்படம் இந்தியாவைத் தாண்டி சீனாவிலும் மற்றும் பல்வேறு ஓடிடி தளங்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஒரு சலூன் கடை உரிமையாளர் தனது வீட்டில் காணாமல் போன ஒரு பொருளைத் தேடி காவல் நிலையம் செல்வதும், அந்தப் புகார் எவ்வாறு ஒரு தீவிரமான கதையாக மாறுகிறது என்பதுமே இப்படத்தின் கருப்பொருளாகும். இந்தத் தனித்துவமான திரைக்கதை சர்வதேச பார்வையாளர்களை ஈர்த்துள்ளதால், தற்போது இந்தப் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைத் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச சந்தையில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, ஹாலிவுட் நிறுவனம் ஒன்று முன்வந்து ரீமேக் உரிமையைக் கேட்டுப் பெற்றுள்ளது. தற்போது இந்தப் படத்தை அங்குள்ள முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு உருவாக்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஹாலிவுட் ரீமேக்கிற்காக ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் மேத்யூ மெக்கானாஹேவின் பெயர் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், மேத்யூ மெக்கானாஹே நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பாகப் பேசிய தயாரிப்பாளர் சுதன் சுந்தரம், மேத்யூ மெக்கானாஹேவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பு இருக்கலாம் என்றும், ஆனால் சம்பந்தப்பட்ட ஏஜென்சி தரப்பிலிருந்தே இறுதி முடிவு உறுதி செய்யப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் மேத்யூ மெக்கானாஹே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்களைத் தாண்டி, தற்போது இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளே நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது.
விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான 'மகாராஜா'வில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்தார். மேலும் மம்தா மோகன்தாஸ், நட்டி, அபிராமி மற்றும் சசனா நம்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சீனாவில் மட்டும் இந்தப் படம் சுமார் 91.65 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. படத்தின் வெற்றி மற்றும் ஓடிடி தளங்களில் கிடைத்த அங்கீகாரம் காரணமாகவே, ஹாலிவுட் நிறுவனங்கள் இக்கதையைத் தங்களது மொழிக்கு மாற்ற ஆர்வம் காட்டி வருகின்றன. முழுமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









