விக்ரம் பிரபுவின் புதிய படத்திற்கு 'சிட்டி ஆஃப் கோல்ட்' எனப் பெயரிடல்: முக்கிய விவரங்கள் இதோ

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சிட்டி ஆஃப் கோல்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் விக்ரம் பிரபு, அடுத்ததாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திற்கு சிட்டி ஆஃப் கோல்ட் (City of Gold) என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநரான சித்தார்த் எழுதி இயக்குகிறார். ரோமியோ பிக்சர்ஸ் பேனரின் கீழ் ராகுல் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிகை சிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் சமூக வலைதள பிரபலமும், இன்ஃப்ளூயன்சருமான அமலா ஷாஜி இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் என்பது கூடுதல் சிறப்பாகும். நட்சத்திரக் கூட்டணியுடன் படம் தொடங்கப்பட்டுள்ளது திரை வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் தலைப்பு அறிவிப்போடு ஒரு அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இது படத்தின் கதைக்களம் குறித்து ஒரு சிறு பார்வையை வழங்குகிறது. வெவ்வேறு குழுக்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்கும் போலீஸ் விசாரணை என விறுவிறுப்பான கதையம்சத்துடன் படம் உருவாகி வருகிறது. படத்தின் கதைக்களத்தை உறுதிப்படுத்தும் விதமாக வெளியாகி உள்ள இந்த முன்னோட்டம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை யுவன் சங்கர் ராஜா ஏற்றுள்ளார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக கார்த்திக் ஷராஜ், படத்தொகுப்பாளராக அருள் மோசஸ் ஏ, கலை இயக்குநராக ஹரிஹரன் பிஎஸ் மற்றும் சண்டைப் பயிற்சியாளராக தினேஷ் காசி ஆகியோர் பணியாற்றுகின்றனர். விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் இப்படம் குறித்து தொடர்ந்து கூடுதல் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிவாத்மிகா ராஜசேகர், நடிகர் பிரபுவுடன் ஒரு படத்திலும், பிக்பாஸ் புகழ் விஜய் வர்மாவுடனும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.









