dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

விழுப்புரம்: சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்கள்; துணிச்சலுடன் கடித்துத் தப்பிய 7 வயது சிறுமி

By K. ராதாகிருஷ்ணன்
144 views
விழுப்புரம் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடத்த முயன்ற கும்பலை, அவர்களை கடித்துக் குதறிவிட்டு சிறுமி தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடத்த முயன்ற கும்பலை, அவர்களை கடித்துக் குதறிவிட்டு சிறுமி தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் கடத்தல் முயற்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவரின் ஏழு வயது மகள், அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது இரு மர்ம நபர்களால் கடத்தப்பட முயன்றுள்ளார். மூன்றாம் வகுப்பு பயிலும் அந்தச் சிறுமி, மர்ம நபர்களின் பிடியில் இருந்து மிகவும் துணிச்சலுடன் போராடித் தப்பியது தற்போது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. புதன்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

தெருவில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் திடீரென சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றுள்ளனர். பைக்கில் ஏற்றிச் செல்லப்பட்ட அந்தச் சிறுமி, சற்றும் பயப்படாமல் தனது சுயநினைவுடன் செயல்பட்டு, கடத்தல்காரர்களில் ஒருவரின் கையை பலமாக கடித்துக் குதறியுள்ளார். காயம் மற்றும் வலியால் அலறிய அவர்கள், சிறுமி சத்தமிட்டதால் பயந்துபோய், சிறுமியை வீட்டிற்கு அருகிலேயே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அழுதபடி வீட்டிற்குத் திரும்பிய சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்த விபரங்களைக் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர் உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், 20 பேர் கொண்ட காவல்துறை குழுவினர் அந்த கிராமத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் சிறுமியின் வாக்குமூலத்தை முழுமையாக நம்பத் தயங்கிய காவல்துறை, அந்த வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இருவர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்வதும், பின்னர் சிறுமி தனியாகத் திரும்பி வருவதும் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடத்தல்காரர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கண்டமானடி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தால் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டிருந்த பத்து சிசிடிவி கேமராக்களும் செயல்படாத நிலையிலேயே உள்ளன. சம்பவம் நடந்த பிறகு காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளைச் சரிபார்க்க முயன்றபோது, அனைத்தும் பழுதாகியிருப்பது கண்டறியப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கருவிகள் பயன்பாட்டில் இல்லாதது காவல்துறையினரை அதிருப்தியடையச் செய்துள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் முறையிட்ட காவல்துறையினர், பழுதடைந்த கேமராக்களை உடனடியாகச் சரிசெய்யவும், குற்றவாளிகளைக் கண்டறிய சாலைகளில் உள்ள பிற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#விழுப்புரம்
#கடத்தல் முயற்சி
#சிறுமி
#குற்றச்செயல்
#செய்திகள்
#Villupuram
#CrimeNews
#KidnappingAttempt
#TamilNaduNews
#PublicSafety
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications