dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

விழுப்புரம்: பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியை அதிரடி சஸ்பெண்ட்

By K. ராதாகிருஷ்ணன்
143 views
விழுப்புரம் அருகே பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள காந்தாடு பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு வராத விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவர்கள், வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் ஆசிரியர்கள் யாரும் வராததால், மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஹெச். ஜெயநபி தனது கடமைகளை முறையாகச் செய்வதில்லை என்றும், ஆசிரியர்கள் அடிக்கடி முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுப்பதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இந்தப் பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், தொடர் அலட்சியத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், முன்பிருந்த 300 மாணவர் எண்ணிக்கை தற்போது சரிந்துள்ளதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும் வகுப்புகள் நடைபெறாத விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கூறுகையில், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயநபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவில் பணிபுரிந்த மீனா என்ற ஆசிரியை நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஆட்சியர், முறையான தகவல் இன்றி விடுப்பு எடுத்த நிரந்தர ஆசிரியை மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வரும் காரணங்களைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், வருங்காலங்களில் பள்ளியின் தரத்தை உயர்த்தி மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#விழுப்புரம்
#அரசுப்பள்ளி
#ஆசிரியர்
#கல்வித்துறை
#பணியிடைநீக்கம்
#Villupuram
#GovernmentSchool
#TamilNaduNews
#TeacherSuspension
#SchoolEducation
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications