விநாயகர் சிலை கரைப்பு: கடலோர மண்டல ஆணையத்தின் அனுமதி கட்டாயம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

விநாயகர் சதுர்த்தி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி கட்டாயம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு மிக முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, கடலோரப் பகுதிகளில் சிலைகளைக் கரைப்பதற்கு முன்னதாக, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNSCZMA) உரிய அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களில் (CRZ-IA) முறையான அனுமதி இன்றி சிலைகளைக் கரைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில், கடலோர மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கலந்துகொள்வதை மட்டுமே அனுமதியாகக் கருத முடியாது என்று தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியுள்ளது. கடலோர மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இந்த ஆணையமே பொறுப்பு என்பதால், அவர்களின் முறையான அனுமதி அவசியம் என்பதை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சிலைகளைக் கரைப்பது தொடர்பாக எழுந்த சுற்றுச்சூழல் கவலைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ரீதியிலான சிரமங்கள் அல்லது போக்குவரத்தை சீரமைப்பதில் உள்ள சிக்கல்களைக் காரணமாகக் காட்டி, சுற்றுச்சூழல் விதிகளை மீற முடியாது என்று தீர்ப்பாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஏற்கனவே சில கரைப்பு இடங்களைக் குறிப்பிட்டிருந்தாலும், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகியவை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த CRZ-IA மண்டலத்தின் கீழ் வருவதால், அங்கு அனுமதி இன்றி சிலைகளை கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கென மாற்று இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, காவல்துறையினர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இதர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தி, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத இடங்களை இறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரைப்பு இடங்களுக்கும் இந்த விதிகளே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









