மலபார் பின்னணியில் வினீத் சீனிவாசனின் புதிய ஹாரர் காமெடி 'சடங்கு': படப்பிடிப்பு நிறைவு

மலபார் பின்னணியில் உருவாகும் வினீத் சீனிவாசனின் 'சடங்கு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகர் வினீத் சீனிவாசன், தற்போது சடங்கு எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். மலபார் பகுதியின் குடும்பப் பின்னணியைக் கொண்ட இந்தத் திரைப்படம், ஹாரர் மற்றும் காமெடி கலந்த கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநரான அபிஜித் சூர்யா இயக்குகிறார். கதையின் திரைக்கதையை இயக்குநர் அபிஜித் சூர்யா மற்றும் விஷ்ணு வினோதன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் வினீத் சீனிவாசனுடன் இணைந்து மீனாட்சி மாதவன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சுரேஷ் கிருஷ்ணா, சோனா நாயர், ஜகதீஷ், நிஹால் நிசாம், பிஜு சோபனம் மற்றும் ஸ்ரீஜித் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, இப்படத்திற்கு ஹலோ ரஷத் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கண்ணன் மோகன் கவனித்துக்கொள்ள, பிபின் அசோக் இசையமைத்துள்ளார். டால்வின் குரியகோஸ், மணி டெல்டா, ஷபீர் மலவத்தாத் மற்றும் எம் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
நடிகராகவும் இயக்குநராகவும் பல்வேறு வெற்றிகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் வினீத் சீனிவாசன், சமீபத்தில் அபிநவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் 'மாலிவுட் டைம்ஸ்' படத்தில் நடித்திருந்தார். தற்போது சடங்கு படத்தின் பணிகளை முடித்துள்ள வினீத், தனது அடுத்த இயக்கத்தில் கவனம் செலுத்தத் திட்டமிட்டு வருவதாகவும், நடிகர் நிவின் பாலியுடன் மீண்டும் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு திரையுலக வட்டாரத்திலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.









