விருதுநகரில் 6,000 கோடி ரூபாயைக் கடந்த பட்டாசு விற்பனை: எதிர்பார்ப்பை விட சரிந்த வணிகம்!

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை 6,000 கோடி ரூபாயைக் கடந்தது, இருப்பினும் முந்தைய ஆண்டை விட விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு விற்பனை 6,000 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த விற்பனை இலக்கு எட்டப்பட்டாலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சுமார் 10 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.கண்ணன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்களை குத்தகைக்கு விட்டு நடைபெறும் முறையற்ற உற்பத்தியைக் கணக்கில் கொண்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் வி.ராஜா சந்திரசேகர் கூறுகையில், மாநிலம் முழுவதும் சுமார் 12,000 கடைகள் தீபாவளிக்காகத் திறக்கப்பட்டிருந்த போதிலும், உண்மையான வணிகர்களுக்கு 20 முதல் 40 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் பட்டாசு விற்பனை இந்த வணிக சரிவிற்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக மட்டுமே தற்காலிக விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டது, முறைப்படி தொழில் செய்யும் வியாபாரிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பட்டாசு விலையில் நிகழாண்டு சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்வு காணப்பட்டதால், முதலீடு செய்த தொகையைத் திரும்ப எடுப்பதே சவாலாக இருந்ததாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, எடையைக் கணக்கிட்டு பட்டாசு விற்பனை செய்வதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் கழிவுத்தாள்கள் மற்றும் மணல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசுகளின் எடையை செயற்கையாக அதிகரிக்கின்றனர். இதனால் குறைந்த விலைக்குப் பட்டாசு கிடைப்பதாக நம்பும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைகின்றனர், உண்மையில் இது தரமற்ற தயாரிப்புகளாகவே உள்ளது என அவர் விளக்கினார்.
தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, சிவகாசி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பிற நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தூய்மைப் பணிகளின் மூலம் சுமார் 227.57 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் பட்டாசு தொடர்பான கழிவுகள் மட்டும் 43.90 டன்னாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக சிவகாசியில் மட்டும் 23.70 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கழிவுகள் விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்டன. சிறப்புத் தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக மட்கும் கழிவுகள், மட்காத கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என வகைப்படுத்தப்பட்டு முறையாக அகற்றப்பட்டன.









