சொந்தமாக இயக்கம் பொறுப்பை ஏற்ற விஷ்வக் சென்: புதிய அதிரடி படமான 'கல்ட்' பற்றி மனம் திறந்த நடிகர்

தனது அடுத்த அதிரடி திரைப்படமான கல்ட் (Cult) திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளதாக நடிகர் விஷ்வக் சென் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்வக் சென், தனது சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ச்சியான திரைப்படங்களின் தோல்விக்கு பிறகு, தற்காலிகமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், மீண்டும் கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில், 'கல்ட்' (Cult) எனும் அதிரடி கலந்த ஆக்ஷன் டிராமா திரைப்படத்தை அவரே இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, தான் ஏன் இந்த படத்தின் இயக்கப் பொறுப்பை ஏற்றேன் என்பது குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் விஷ்வக் சென் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முன்னதாக இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட தாசுதீன் என்பவரிடம் விஷ்வக் சென் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். படத்தின் பணிகள் தொடங்கியவுடன், அதைத் தானே இயக்க வேண்டும் என்று தோன்றியதால் இத்தகைய முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். தாசுதீன் தனது நடிப்பு குரு என்றும், அவரிடம் தான் எப்போதும் சந்தேகங்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். பிறரின் பெயரில் நிழல் இயக்குநராக செயல்படுவதை விட, ஒரு படத்திற்கு பொறுப்பேற்பது அவசியமானது என்ற தனது நேர்மையான நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
தனது சமீபத்திய தோல்விகள் குறித்து மனம் திறந்து பேசிய விஷ்வக் சென், ஒரு கட்டத்தில் தான் மனதளவில் சோர்வாக இருந்ததாக ஒப்புக்கொண்டார். அப்போது தனது சகோதரர் அளித்த ஊக்கமே தன்னை மீண்டும் இயங்க வைத்ததாக தெரிவித்தார். தனது வெற்றி மற்றும் தோல்விகள் தன் கைகளிலேயே உள்ளது என்பதை உணர்ந்ததாலேயே, இந்த 'கல்ட்' திரைப்படத்தில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளதாக அவர் கூறினார். இந்த படத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழில்முறை நடிகர்கள் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவரது கடின உழைப்பும் இந்த திரைப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவாவில் உள்ள ஒரு தீவில் சிக்கிக்கொண்ட 300 பேர், தங்களை காப்பற்றிக்கொள்ள போராடும் ஒரு அதிரடி சூழலை மையமாக வைத்து இந்த கதை நகர்கிறது. டிஎஸ்பி சங்கல்ப் நாயக் என்ற கதாபாத்திரத்தில் விஷ்வக் சென் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் காயத்ரி பரத்வாஜ் கதாநாயகியாகவும், தாரக் பொன்னப்பா வில்லனாகவும் நடித்துள்ளனர். முரளி சர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படம், அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உலகளவில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜப்பானிய மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.









