குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதியத்தில் முறைகேடு: நேரடி வங்கிப் பரிவர்த்தனைக்கு கோரிக்கை

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்குகள் மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளனர். தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 தொழிலாளர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். குடிநீர் வடிகால் வாரியம் தற்போது நேரடியாக முதல்வரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், நிலுவையில் உள்ள தங்களது நீண்டகால சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தாமுபரணி கூட்டு குடிநீர் திட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அதிகாரிகளின் கூட்டுச் சதியால் பெரும் நிதி இழப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 12,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியத்தில் ஆண்டுக்கு சுமார் 90 கோடி ரூபாய் வரை முறைகேடு நடப்பதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான 15,401 ரூபாய்க்குப் பதிலாக, தங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் முதல் 9,800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உரிமைக்காக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். எனினும், அதிகார வர்க்கத்தின் தலையீட்டால் தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஊதியத்தை வங்கி கணக்கு வழியாகவே வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தாலும், அவை களத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது இவர்களின் முக்கிய புகாராக உள்ளது. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020, பிரிவு 55(2)-ன் படி, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒப்பந்த விதிகளிலும் வங்கி மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி ஊதியத்தை வங்கி கணக்கில் வழங்கக் கோரும் தொழிலாளர்களை, ஒப்பந்ததாரர்கள் அச்சுறுத்துவதாகவும், வேலை நீக்கம் செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. நேரடி வங்கிப் பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்தால், ஊதியத்தில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்படும் என்பதோடு, தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய முழு ஊதியமும் பாதுகாப்பாகக் கிடைக்கும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தென்காசி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் எஸ். இளங்கோ, இத்தகைய ஊதியப் பரிவர்த்தனை நடைமுறைகள் குறித்த அரசாணைகள் மற்றும் சட்டங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் ககன்தீப் சிங் பேடியிடம் இதுகுறித்து வினவப்பட்டும் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.









