dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு: சம்பா சாகுபடிக்கு வழிவகை

By Admin
06/09/2026
40 views
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு: சம்பா சாகுபடிக்கு வழிவகை

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளுக்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளைத் தொடங்குவதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவமழை மற்றும் நீர்வரத்து சூழல் காரணமாக, செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர், நீண்ட பயணத்திற்குப் பிறகு சனிக்கிழமை இரவு கல்லணையை வந்தடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு கல்லணையின் மதகுகளை இயக்கினர். இதன் மூலம் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் முறைப்படி திறந்துவிடப்பட்டது. அமைச்சர்களுடன் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்று, அணையில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரின் மீது மலர் தூவியும், நெல் விதைகளைத் தூவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தண்ணீர் திறப்பு நிகழ்விற்கு முன்னதாக, கல்லணையின் அருகாமையில் உள்ள ஆதி விநாயகர் கோயில், கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மற்றும் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட இந்த நிகழ்வு, காவிரி டெல்டா விவசாயிகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 12.68 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் தடையின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது முதற்கட்டமாக காவிரி மற்றும் வெண்ணாறு ஆறுகளில் தலா 1,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தலா 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணைக்கு வந்து சேரும் நீரின் அளவைப் பொறுத்து, வரும் நாட்களில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும், முறையான நீர் மேலாண்மையைப் பின்பற்றவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#காவிரிடெல்டா
#கல்லணை
#சம்பாசாகுபடி
#விவசாயம்
#தஞ்சாவூர்
#CauveryDelta
#Kallanai
#TamilNaduAgriculture
#SambaPaddy
#Tanjavur
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications