பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்தி: கால அவகாசத்தை நீட்டிக்க நெசவாளர்கள் கோரிக்கை

பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக நெசவாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் பொங்கல் பண்டிகைக்காக 1.77 கோடி சேலைகள் மற்றும் 1.77 கோடி வேட்டிகளை உற்பத்தி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உற்பத்திப் பணிகள் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய காலக்கெடு குறித்து நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள டிசம்பர் 15-ம் தேதிக்குள் பணியை முடிப்பது சாத்தியமில்லை என்பதால், அந்த கால அவகாசத்தை ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திப் பணிகளில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் ஈடுபட்டுள்ள நிலையில், தரமான உற்பத்திக்கு கூடுதல் காலம் அவசியம் என்பது அவர்களின் வாதமாகும்.
நெசவாளர்களின் தரப்பு தகவல்படி, தற்போதைய காலக்கெடுவில் பணியை மேற்கொண்டால், மொத்த ஆர்டரில் சுமார் 60 முதல் 70 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு இதே திட்டத்தின் மூலம் 15,000 விசைத்தறிகளில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, கால அவகாசத்தை நீட்டிப்பது நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தரமான துணிகளை அரசுக்கு வழங்கவும் உதவும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், கடந்த நவம்பர் 2-ம் தேதி வெளியான கூடுதல் அரசாணையின்படி, கூடுதலாக 10 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகளைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தானியங்கி தறிகளைப் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளத் திட்டமிடுவதாக வரும் தகவல்கள் நெசவாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, முழுக்க முழுக்க கைத்தறி, மிதித்தறி மற்றும் விசைத்தறிகள் மூலமே முழு உற்பத்தியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், தானியங்கி தறிகளின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசுக்கு நெசவாளர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.









