வேலூரில் மீட்கப்பட்ட மேற்கு வங்க தொழிலாளி: ஐந்து மாத சிகிச்சைக்குப் பின் குடும்பத்துடன் நெகிழ்ச்சி சந்திப்பு

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி, ஐந்து மாதங்களுக்குப் பிறகு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இணைந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தின் (ECRC) தொடர் முயற்சியால், மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் குணமடைந்து தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். பாபு என்றழைக்கப்படும் சாந்தி கோபால் சானா என்ற 32 வயது இளைஞர், கடந்த சில மாதங்களாக வேலூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமையால், அவரது உடல் மற்றும் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் மாதம் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மிகவும் மோசமான நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சுற்றித் திரிந்தபோது இந்த நபர் மீட்கப்பட்டார். இது குறித்த தகவல் கிடைத்ததும், ஈசிஆர்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் கே. கோவிந்தன் மற்றும் வழக்கு மேலாளர்கள் எம். பிரவீன், பி. பிரியங்கா ஆகியோர் அந்த நபரிடம் அன்புடன் பேசி, வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சட்டப்பூர்வமான நடைமுறைகள் முடிவடைந்த பின்னர், அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன. வேலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனுஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரின் சொந்த ஊர் மற்றும் அவரது குடும்பத்தினரின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். காவல்துறையின் இந்த துரித நடவடிக்கையினால் மேற்கு வங்கத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் குறித்த விபரங்கள் கிடைத்தன. சுமார் ஐந்து மாத கால மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, பாபுவின் உடல் மற்றும் மனநிலை முற்றிலும் சீரடைந்தது.
மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் எம். ரோகிணி தேவி மற்றும் இதர மருத்துவர்களின் முன்னிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் பாபு மேற்கு வங்கத்தில் உள்ள தனது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி அவர் தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாகச் சேர்ந்துள்ளார். ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளியின் வாழ்வை மீட்டெடுக்கத் துணைபுரிந்த ஈசிஆர்சி குழுவினர் மற்றும் வேலூர் காவல்துறையினரின் இந்த மனிதாபிமான செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.









