சத்தியமங்கலம் அருகே சோகம்: விளைநிலத்தில் புகுந்த காட்டு யானை தாக்கி விவசாயி பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஜீராகள்ளி வனப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 62 வயதுடைய விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். காமையன்புரம் கிராமத்தைச் சேர்ந்த உ. பசுவச்செட்டி என்பவர் தனது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் மஞ்சள் பயிரிட்டு பராமரித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு உணவை முடித்துவிட்டு, வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக வழக்கம்போல அவர் தனது நிலத்திற்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒற்றை காட்டு யானை பயிர்களைச் சேதப்படுத்த முயன்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் தனது நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட பசுவச்செட்டி முயற்சித்துள்ளார். யானையை நோக்கி சத்தமிட்டு அதை அச்சுறுத்தி நிலத்திலிருந்து வெளியேற்ற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த யானை ஆக்ரோஷமாக அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, அதற்குள் யானை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்துவிட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹசனுர் காவல்துறையினர் மற்றும் ஜீராகள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பசுவச்செட்டியின் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பசுவச்செட்டிக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயியின் மரணத்தால் ஆத்திரமடைந்த தாளவாடி மற்றும் ஜீராகள்ளி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியில் திரண்டு வந்து கடும் போராட்டத்தில ஈடுபட்டனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் உடனடியாக ரூ.50,000 ரொக்கமும், ரூ.9.5 லட்சம் மதிப்பிலான காசோலையும் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.









