2026 ஆசிய விளையாட்டுப் போட்டி: ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர் முகுல் தஹியா இடைநீக்கம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவிருந்த மல்யுத்த வீரர் முகுல் தஹியா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட மல்யுத்த வீரர் முகுல் தஹியா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 31-ஆம் தேதி லக்னோவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (SAI) மையத்தில் நடைபெற்ற தேர்வுப் போட்டிகளின் போது இவருடைய மாதிரி சேகரிக்கப்பட்டது. 86 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் இவர், அந்தத் தேர்வுப் போட்டியில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தகவல்களின்படி, முகுல் தஹியாவின் மாதிரியில் மெபென்டெர்மின் (Mephentermine) எனும் ஊக்கமருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவு குறித்த தகவல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகே தெரியவந்துள்ளது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) வழக்கமாக இத்தகைய தகவல்களை உடனே பரிமாறும் நிலையில், இந்த முறை காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆர்மீனியாவின் யெரெவன் நகரில் இந்திய வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்த முகுல் தஹியா, இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின் விளைவாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 86 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் எந்த வீரரும் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதேபோல், 130 கிலோ கிரேக்கோ-ரோமன் மல்யுத்தப் பிரிவிலும் இந்தியா பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தத் தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்த மற்றொரு வீரரான தீபான்ஷு, ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அவர் நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக ரோனக் தஹியாவைச் சேர்க்க இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், இந்த இரண்டு எடைப் பிரிவுகளிலும் இந்தியா பிரதிநிதித்துவம் பெறாது என்று தெரிகிறது.
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மற்றொரு வீரரான தீபான்ஷுவுக்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்டானோசோலோல் (stanozolol) எனும் தடைசெய்யப்பட்ட மருந்தை உட்கொண்டது கண்டறியப்பட்டது. இதற்கு முன்பும் இதே குற்றத்திற்காகத் தண்டனை பெற்றிருந்த அவர், தற்போது இரண்டாவது முறையாக ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டுள்ளதால், அவருக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊக்கமருந்து சர்ச்சைகள் இந்திய மல்யுத்த வீரர்களின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. தற்போது இந்திய மல்யுத்த வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 16 எடைப் பிரிவுகளில் மட்டுமே பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









