ஊக்கமருந்து விவகாரம்: மல்யுத்த வீரர்களுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு முக்கிய எச்சரிக்கை

மல்யுத்த வீரர்களிடையே அதிகரித்து வரும் ஊக்கமருந்து பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரர்களிடையே ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான புகார்கள் மற்றும் விதிமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) அனைத்து மல்யுத்த வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் மற்றும் விளையாட்டு உதவியாளர்களுக்கும் மிக முக்கியமான வழிகாட்டுதல் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் தங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதிலும் வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்த தீபான்ஷு (130 கிலோ கிரேக்கோ-ரோமன்) மற்றும் முகுல் தஹியா (86 கிலோ பிரீஸ்டைல்) ஆகிய இரண்டு முன்னணி வீரர்கள் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்தனர். இது இந்திய மல்யுத்த வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களைக் களமிறக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால், ஜப்பானில் நடைபெறவுள்ள இந்த குறிப்பிட்ட எடைப் பிரிவுகளில் இந்தியா பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது விளையாட்டுத் துறையில் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இவர்கள் தவிர, இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற நிகில் (55 கிலோ கிரேக்கோ-ரோமன்) மற்றும் ரோகித் குமார் (65 கிலோ பிரீஸ்டைல்) ஆகியோரும் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சிராக் சிகாராவுக்கும் NADA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் வீரர்களின் விளையாட்டு வாழ்க்கையை மட்டுமின்றி, ஒட்டுமொத்த மல்யுத்த விளையாட்டின் நற்பெயரையும் பாதிப்பதாகக் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
வீரர்கள் தங்களின் மருந்துகள், ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சக வீரர்கள், பயிற்சியாளர்கள் அல்லது உடற்பயிற்சி நிலைய ஊழியர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை, உரிய சரிபார்ப்பு இன்றி உட்கொள்ள வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், NADA-வின் விதிமுறைகளின்படி தங்களின் இருப்பிடம் தொடர்பான விவரங்களை (Whereabouts) அவ்வப்போது முறையாகப் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கும் நோக்கில், வீரர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள், ஊக்கமருந்து தடுப்பு குறித்த கல்விப் பயிற்சிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை அமர்வுகள் நாடு முழுவதும் உள்ள தேசிய முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்களில் நடத்தப்படும் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது.









