ஏற்காடு மலைக்கிராமங்களில் கல்விச் சுடர்: யுனிட்டி ஆஃப் யூத் அறக்கட்டளையின் சிறப்பான சமூகப் பணி

ஏற்காடு மலைக்கிராமங்களில் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக யுனிட்டி ஆஃப் யூத் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் தன்னார்வப் பணிகள் பலரது வாழ்க்கையை மாற்றியமைத்து வருகின்றன.
ஆர்வமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இளைஞர்கள் ஒன்றிணைந்தால் சமூகத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது யுனிட்டி ஆஃப் யூத் அறக்கட்டளை. கல்லூரி நாட்களில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் (NSS) தீவிரமாக ஈடுபட்ட ஆர். விஜய் என்பவரின் வழிகாட்டுதலில் 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக முன்னேற்றப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் குறைவான மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கமாகும்.
ஏற்காட்டின் குண்டூர் கிராமத்தில் தொடங்கிய இவர்களது பயணம், இன்று செங்கலத்துப்பாடி, கீந்துக்காடு, பெரியகாடு, செம்மநத்தம் மற்றும் தோப்புக்காடு உள்ளிட்ட 13 மலைக்கிராமங்களுக்கு விரிவடைந்துள்ளது. தொடக்கத்தில் அப்பகுதியில் நிலவும் மின்சாரம், குடிநீர் மற்றும் சுகாதாரச் சிக்கல்களை உணர்ந்த தன்னார்வலர்கள், தங்கள் சொந்த நிதியுதவியுடன் குடிநீர் தொட்டிகள் மற்றும் சூரிய சக்தி விளக்குகளை அமைத்துக் கொடுத்துள்ளனர். இத்தகைய செயல்பாடுகள் கிராமப்புற மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைக்க பெரிதும் உதவியுள்ளன.
கல்வித் துறையில் இந்த அறக்கட்டளை ஆற்றி வரும் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். கல்வி பாதியில் நின்றுவிடக்கூடாது என்பதற்காக கிராமப்புற மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன், நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்குப் பேருதவியாக இருந்து மாணவர்களை ஊக்குவிக்கின்றனர். இதன் விளைவாக, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளனர். செங்கலத்துப்பாடியைச் சேர்ந்த ஈ. நிவேதா போன்ற மாணவிகள், இந்த அமைப்பின் உதவியுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னையில் பல் மருத்துவப் படிப்பில் (BDS) சேர்ந்து மருத்துவர் கனவை நோக்கிப் பயணிப்பது இவர்களின் உழைப்பிற்குச் சான்றாகும். மாலை நேரக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதல் கல்வி உதவியும், ஆரோக்கியமான சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
இந்த மாற்றங்களை வெளியில் இருந்து வருபவர்களை விட, அந்தந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களே முன்னின்று நடத்த வேண்டும் என்பது விஜய்யின் வலுவான கொள்கையாகும். கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதன் மூலம், கிராமங்களின் முன்னேற்றத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர். கல்வியுடன் நின்றுவிடாமல், பாரம்பரிய கலைகளான சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளையும் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குக் கற்பித்து வருகின்றனர். இதில் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் சிறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன், குழந்தை திருமணங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியும் இந்த அறக்கட்டளை சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.









