ஸ்லம் டாக் படத்தில் இணையும் பிரபல நடிகை ஜரீனா வஹாப்: புதிய கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியீடு

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு' படத்தில் சுபைதா கதாபாத்திரத்தில் ஜரீனா வஹாப் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில், மூத்த நடிகை ஜரீனா வஹாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் 'சுபைதா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'அன்பு நிறைந்த இதயம், போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை' என்ற வாசகத்துடன் அவரது கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் நடிகை தபு, துனியா விஜய், விடிவி கணேஷ் மற்றும் பிரம்மாஜி ஆகியோர் நடிக்கின்றனர். பூரி ஜெகந்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் இணைந்து 'பூரி கனெக்ட்ஸ்' பேனரில், ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், வெளியீட்டுத் தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முன்னதாக, இப்படத்தில் தபு ஒரு அதிகாரமிக்க போலீஸ் அதிகாரி 'கௌரி ஹெக்டே' கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். துனியா விஜய் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்க, சந்தோஷ் நூஜில்லா படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
இயக்குநர் பூரி ஜெகந்நாத் தனது முந்தைய படைப்பான 'லைகர்' படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு, இந்த புதிய திரைப்படத்தை மிகுந்த கவனத்துடன் உருவாக்கியுள்ளார். விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பூரி ஜெகந்நாத்தின் மேக்கிங் ஸ்டைல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் டீசர் மற்றும் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.









